துருவன்

மதி மயங்கிய இனிய மாலைப் பொழுதில்
மதி தெளிய பாகவதம் கேட்டமர்ந்தனனே
மனுமகன் வழிதுளிர்த்த சிறு துருவன்
மழலை மொழியுமிழ நடை பழகித் தவழ
மனமகிழ ஓடி வந்து தாவித் தந்தை
மடியமர முயன்று தோற்ற விசும்பல்
மணிவண்ணா நின்செவி விழுகிலையோ !
மண்ணும் விண்ணும் அளந்த பாலா நீ
எண்கிலையோ நின்போல் சிறுபிள்ளையென !

என்மகன் மடியமர்த்தி முத்தமிட்டு அவன்
மென்தாள் வருடித் துருவன் நினைந்துருகி
என்விழி வழித்திவலை திரள, தண்மழை
என்றெண்ணித் தவளை கத்தித்தே – பண்டு
தன்மகன் பிழைத்த தந்தை ஒறுக்க
தூண் பிளந்து வெகுண்டெழுந்த சிங்கன்,
தேம்பிய துருவனை மறந்தது பிழையென
நவில்கிலையோ நின்புகல் நப்பின்னையும் !

களிறொன்று பிளிற செங்கழுகு தோளேறி
ஒளிவென்றோடி முதலை கொன்ற முகுந்தா
பிள்ளை கண்டும்நின் னுள்ளம் நெகிழாது
பள்ளி கொள்ள இயன்றிற்றோ இயம்பின் !
ஒருக்கால் அவன்தவம் தழுவி நெஞ்சுருகி
திருக்கண் வளர்ந்து, கருணைப் புனலது
திரண்டுருண்டு விளைந்த விண்கடல்,
அரங்கா நீயயரும் வெண்பாற்கடலோ ?

Hints:

மனுமகன் ஸ்வாயம்பு மனுவின் மகன் உத்தானபாதன் – துருவனின் தந்தை
அளந்த பாலா – வாமன அவதாரத்தில் பிள்ளையாய் வந்த பெருமாள்
சிங்கன் – பிரகலாதன் காக்க தூண் பிளந்து வந்த நரசிங்க பெருமாள்
களிறு- கஜேந்திரன் யானை
செங்கழுகு – கருடாழ்வார்
ஒளிவென்றோடி – ஒளியின் வேகத்தை வென்று ஓடி வந்து காத்தான்